Saturday, September 26, 2015

ஒரு காதல் தேவதை பூமிக்கு வந்தாள் ( மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் நூலுக்கு தமிழரசியின் விமர்சனம் )



 மெல்ல இருளில் வீழ்ந்த என் நிழலின் மேல் பாயாமல் நடக்கிறது வெளிச்சம். ஒரு இலக்கிய தாகத்தில் நா வரண்டு இலக்கியம் பருக எனக்கும் ஆசை ஆனால் இலக்கியம் அறியேன். இத்தனை நாள் பத்மாவின் கவிதைக்கு விமர்ச்சனம் எழுத நான் தகுதியானவளா என ஆராயவே தாமதம், இல்லையென தெரிந்தும் மனதின் உந்துதலால் எழுதியே விட்டேன்..............!!

சற்று நேரம் உடன் வாருங்களேன் பயணிப்போம்..

என்னையும் காட்டிகொடுத்து விட்டுப்போகிறது “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “.

என்னை பின் தொடரவோ முன் சென்றுக்கொண்டோ யாருமில்லாது தனிமையில் என் பாதையை கடப்பதாய் நினைவுகளில் நான். பல்வேறு மக்கள் பயணங்கள் கொண்டது இந்த வாழ்க்கை. இதில் எனக்கான பாதையை கடக்கும் சிலரோடு மட்டுமே என்னை கண்டும் ஒப்பிட்டும் கணக்கோடும் ஒன்றியும் வாழமுடியும். இப்படியானதொரு தருணத்தில் அறிந்துக்கொண்டேன் எனக்கு முன், பின் சற்றேரக்குறைய தான் பயணித்துக்கொண்டிருக்கிறார் பத்மா உணர்வுகளால்.

உலகம் உருண்டை இந்த உண்மை அல்ல இப்போது எந்தன் கருத்து. நமக்கான மனிதர்கள் நம்மோடு வாழ்வதாய் கொஞ்சம் முதுகில் வருடி தோள் நிமிர்த்தி கன்னத்தில் முத்தமிட்டு வா பெண்ணே என்னோடு என நடை போட துணைக்கழைக்கிறது இவருடைய “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “

எத்தனை உணர்வுகளை, ஆக்கங்களை, வலிகளை, நிராகரிப்புகளை, ரசனைகளை, வாழ்வியலை, கொண்டாட்டத்தை, எதார்த்தங்களை 96 பக்கங்களில் 70 கவிதைகளில் நிரப்பி தன் காகித கப்பலில் நம்மையும் பயணியாய் பிரயாணம் செய்வித்திருப்பது இவர் கவிதையின் சிறப்பு. ஒரு சேலை ஒன்றை வாங்கினாலே மனக்கணக்கில் அளந்து அணிந்து அழகு பார்க்கும் நம் திறமை இப்படியான சூழலில் இந்த கவிதைகள் நம் கடந்த நிகழ் எதிர் என முக்காலத்தையும் உடன் கொண்டு வர தவறவில்லை.

சேலை ஒன்றை வாங்க முடிவெடுத்ததும் நிறம், வாகு, துணியின் தன்மை, விலை, கடை, உடுக்க போகும் நிகழ்வு என மட்டும் மனம் அசைப்போடும். ஆனால் “ புடவை “ என்னும் கவிதையில் சொல்கிறார் ஆசிர்வதிர்க்கப்பட்ட சேலைகள் என்ற ஒரு புது சொல்லை.. சற்றே வியக்கிறேன். உண்மை தான் இதுகாலும் எனக்கேன் இப்படி ஒரு சொல்லோ அதன் சரியான அர்த்தமோ எட்டவே இல்லையென்று அதோடு மட்டுமின்றி சில சேலையின் அழகு “ களைதலிலும், கலையிலும் “ உள்ளதென்று சேலையின் மேல் காதல் உள்ளோர்க்கு சேலை களைதலிலும் கலையே என்று காதல் ரசம் பொங்க செய்திருக்கிறார் தன் வரிகளில்..!!

“தனிமை பயணங்கள் “ என்ற ஒரு கவிதையில் உறவும் அன்புக்கும் துணைக்கும் மட்டுமல்ல ஒரு பயணத்துக்கும் சில ஆசைகளும் தேவைகளும் இருக்கிறதென்றும் இல்லாத போதின் வலியை சட்டென்று நாமே ”உச்” கொட்டவைக்கும் அனிச்சை செயலுக்கு நம்மை அழைத்து செல்கிறது கவிதை..!!

“ கரை ஒதுங்கிய கப்பல் “ என்ற கவிதை நாணம் சிந்திக்கொண்டே மெல்லமாய் சிணுங்குகிறது “ ஃப்ளீஸ் டா”வென்று..!!

“ கல்லாட்டம் “ இதில் ஒரு உறவாக்கம் செய்திருக்கிறாள் பத்மா..!!

“ பொறியில் சிக்குதல் “ நாம் சிக்கி தவித்ததையும் ஸ்லாகித்தைதையும் பச்சையம் பூசி கொண்டு வருகிறது கண் முன்னே..!!

“ கன்ஃபார்ம்ட்” இது இன்னும் நம் சமுகம் கழிவிரக்கமற்ற தன்மையில் இருந்து ஒரு துளியேனும் மேம்படவில்லை என்பது எடுத்து சொல்வதோடு அல்லாது சற்றே கோபப்படவும் வைக்கிறது..!!!

“எப்படி இயலும் “ உணர்ந்தால் அன்றி அறிய இயலாது எப்படி இயலுமென்பதின் நிதர்சணம்

“ கதவிலக்கம் தொலைத்த வீடு “ இப்படி வீட்டை கடக்காது நிறையாது நம் இலக்கம்.

“அம்மா ‘ வில் தாய்மை பேசியிருக்கிறாள் இந்த தாயும்.!!

காகித கப்பல்களாய் கவிதை புத்தகமெங்கும் காதல் நீரில் மிதந்த கவிதைகள் அதிகம் இதில். அவை காதலில் ஊறி நனைந்து அமிழ்ந்து பிய்ந்த போதும் காதல் காற்றில் ரீங்காரமிட்டு நம் காதுகளை நிரப்ப தவறவில்லை.

குறிப்பாக காதல் கவிதைகளில் பத்மா நம்மை சிறிது நேரம் கற்பனையில் லயிக்க வைத்து காதலின் நிகழ்கால உணர்வை பிரதிபலிக்க செய்துவிட்டிருக்கிறார். ஒரு மேடை பாடகனின் கழுத்தில் இருக்கும் மரு கூட கொண்டாடப்பட்டிருக்கிறது இவர் கவிதையில் காதலாய்..காகித கப்பல்களில் இவர் ஆசைகளை நிரப்பி பயணிக்க செய்து இதழ்களற்ற பெண்ணாய் காத்திருந்த தருணம் ராட்சஸி காதல் சுரபியா நீ..!!

“ கடைசி முத்தம்” என் புரிதலில் செத்துப்போனேன் நான்...............!!

அப்பப்ப்ப்பபா காதலை முத்தத்தையை இப்படியா கொண்டாடுவாய் நீ..பாரேன் எனக்கு இப்போது என் காதலனிடம் முத்தம் கேட்டு யாசிக்க தோன்றுதே...!!

மேற்கூறிய யாவும் முகப்பூச்சற்ற பத்மாவின் எழுத்துக்களுக்கு என் மனம் கனிந்த கருத்துக்களே.. நட்பென்ற ஒன்றை இதில் நான் கொண்டு வரவே நினைக்கவில்லை, எழுத்தை ரசிக்க வாசிக்க உணர முகமும் நட்பும் தேவையற்றதாய் தோன்றியது இவர் கவிதைகளை நான் சிலாகித்த நொடிகள். நான் என் நிஜக்கண்களில் நிரப்பி அனுப்பும் அன்பை உன் காதல் கவிதைகளுக்கு தந்த முத்தங்களாய் இட்டுக்கொள் பத்மா..!!

நம்மை நாம் ஒரு தரம் திரும்பி பார்த்துக்கொள்ள நினைத்தோமானால் அல்லது சற்று நேரம் ஒரு புதிய உணர்வொன்றில் லயிக்க விரும்பினால் மிகவும் சரியான தேடலாய் அமையும் “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “

“ காதலரசியடி நீ பத்மா...!!! “


புத்தகம் வாங்க தொடர்புக்கு:

திரு. வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
எண் ; 6 மஹாவீர் காம்ப்ளக்ஸ்
முனுசாமி சாலை
கே. கே நகர் மேற்கு
சென்னை - 78
அலை பேசி எண் : 044 65157525, 9940446650