Tuesday, July 23, 2013

கடனாற்றல்

சாப்பிட்டு,துடைத்து,
மறு நாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு,
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்,
அணைக்க மறந்த ட்ரான்ஸிஸ்டரின்
தனிமைப் பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்.

நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய் மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ.

நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்!

Monday, July 22, 2013

முத்தப் புன்னகை

எதையும் எடுத்துக் கொள் என
கைதூக்கி சரணடைந்து விட்டாய்
 

ஆனால் உன் புன்னகையைத் தவிர
வேறு ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை

உனக்குத் தெரியாமல் ஒரு சிறுசுளை புன்னகையை என் கைக்குட்டையில் திருடிக் கொண்டு வந்து விட்டேன்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என மேனியில் இளைப்பாற விட்டது ஏனோ தவறாகிப் போனது

என் உதடடைந்து ஒரு முத்தம் பறித்து என்னை கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கி

உடலெங்கும் புன்னகை மலர தொடங்கிவிட்டது.

போதும்!


உன்னுடையதை நீயே வைத்துக் கொள்

இல்லை உடல்மலர்ந்தவைகளையாவது உடனே கொய்து விடு

சாந்தியடையட்டும் நான்