Tuesday, January 26, 2010

"ஒற்றைக் காகம்":

தூரத்து பனைமரத்தின்
ஒற்றைக் காக்கையாய்
யாரும் கவனிக்காமலே
போகிறது என் இருப்பு

காக்கை அமர
கனிவிழும் கதையாய்
ஒற்றைக் கல்லால்
என் இருப்பைக்
கலைத்துச் சென்றாய் நீ

படாமல் பட்ட அடிவாங்கி
சிறகொடிந்து கரைகிறேன்
காணாமலே போயிருக்கலாம் என்று !

Monday, January 25, 2010

எப்படி இயலும்?




உத்திரத்தின் நடுவே
கௌலிக்கும் பல்லி
ஜன்னல் காற்றில்
படபடபடக்கும் பழைய நாள் காட்டி
தாளகதி மாறா தொனியில்
சுற்றிக்கொள்ளும் விசிறி
கரடு முரடாய் அவ்வப்போது
ஒரு குறட்டையொலி
பாலுக்குச்சிணுங்கும்
பக்கத்து வீட்டு பச்சிளம்
எதோ கண்டு ஊளையிடும்
வாலில்லா பெட்டைநாய்
முகத்தருகே பறந்து
பாடும் சாகா கொசுக்கூட்டம்
நட்ட நடுநிசியில் வீறிட்டெழும்
பாதுகாவலர் ஊதல்
எல்லாம் மீறி
அந்த ஓட்டை குழாயின் நீர்சொட்டும் ஒலியில்
நாள் தவறாது உனது பெயர்.
எப்படித் தூங்குவேன் நான்

தீங்குளிர்



டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ
ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக
நிலம் நோக்கி
வியர்வைக் கடல்.

Wednesday, January 13, 2010

ஐயகோ !


கோமணத்த விட கொஞ்சம் பெருசா
சாணகலம் நஞ்சை இருக்கு !
நிலத்தை நம்பி பெருசு ரெண்டு ,
கனவு காணற பொண்ணு ஒண்ணு ...
படிச்சு ஒசர போறோமுன்னு
வீரம் பேசுற கன்னும் உண்டு ...
கட்டி வந்த நாளிலேந்து
தட்டி பேசா அப்பாவி ஒண்ணு ...
கிடைக்கு அனுபிச்ச ஆடு ரெண்டு
சீம்பால் தரும் செவலை ஒண்ணு ....
இம்புட்டு பேருக்கும் வயிற ரொப்ப
கடமை இருக்கும் காளை நானு........

அக்கம் பக்கம் இளிச்சு திரிஞ்சி
இருந்த தாலியும் அடகு வச்சு
மழையிலும் வெயிலும் மனசு அடிக்க
வெதச்சு, காய்ச்ச வெள்ளாமை எல்லாம்
பத்து மைலு காலு வலிக்க
சைக்கிள் மிதிச்சு டவுனுக்கு வந்து ...
வெறும் நாலு... பத்து ருவாயின்னு
தங்க சோளகதிர வித்தா ......
ஆறு கேட்டு பேரம் பேசி...
வாங்காம போய் வயித்திலடிக்கும்....
'கப்பு' முப்பதுனாலும் சரி
சொன்ன விலைய சிரிச்சு கொடுத்து
"அமெரிக்க சுவீட்கார்ன்"வாங்கி தின்னும்
சொரண கெட்ட நம்ம சனம் .

***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***