Saturday, March 15, 2008

மௌனம்

என்னவெல்லாமோ பேச
என்னை முனைபடுத்தியிருந்தேன்.
நேற்று பூத்த முதல் ரோஜா.....
முகத்தில் விழுந்த முதல் மழைத்துளி......
என்னிடம் புன்னகைக்கும் அந்தக் குழந்தை.....
பார்த்தவுடன் வாங்கிய பிரிய சேலை.......
பாதி மட்டுமே நினைவில் உள்ள நாமிருந்த கனவு......
மனதறியாமல் நோகடிக்கும் நிகழ்வு.......
வாழ்ந்தேகாட்டுவேன் என நான் எடுத்த முடிவு.........
வாங்க நினைக்கும் அந்த குட்டி நாய்குட்டி......
என பட்டியல் போட்டுத்தான் வந்தேன்,
உன் முகம் பார்த்ததும்..
புரிதலுடன் கூடிய புன்னகை கண்டதும்...
சொல்ல வந்ததெல்லாம் சொன்னாற்போல்...
ஓர் உணர்வில்,
வார்த்தைகளே இல்லா வார்த்தைப் பரிமாற்றத்தில் நாம்!

Friday, March 14, 2008

மனமும் புற்றும்

உள்ளே உறைவது
யாதென அறியா
பயத்தில் பால் வார்க்கும் மக்கள்.....
எறும்புகள் ஊறும்,
இல்லை,
வெற்றிடமாய் வெளிறும்......
எறும்பு மொய்த்த
வெற்றிடத்தில்,
சீறும் நாகம்
உறங்கக் கூடும்!
உள்ளிருப்பது என்னவென்று
வெளிப்படுத்தா விதத்தில்
மனமும் புற்றும்.....
விடமுடைய பாம்பின்
உறைவாய்......
விடத்தையும் விஞ்சும்
எண்ணங்களின்
உறைவாய்......
மனமும் புற்றும்.......
மனமெனும் புற்றும்.......

Wednesday, March 12, 2008

நினைவு

எங்கோ ஒலிக்கும்
ஒரு சிரிப்பொலி
யாரோ சொல்லும்
ஒரு வார்த்தை
தூரத்தே தெரியும்
உடையின் நிறம்
என்றோ படித்த
வரிகளில் நினைவு
இதில் எல்லாம்
தெரியும் உன்னை
மறக்கத்தான் முயல்கிறேன்......
எனினும்
உன்னுருவாய் என்னருகே
வந்தமர்ந்து
உன் கண்ணால் எனை நோக்கும்
நம் கண்மணியை
காணும் போதெல்லாம்
கல்லாய் வந்து அடைக்குதே
உன் நினைவு
அதை எங்கணம்
களைய சொல்?

ஸாமா ராகம்

சாமா ஒரு அழகிய ராகம்.
இதில் மூன்று திரைஇசை பாடல்கள் உள்ளன.
மூன்றும் வித்யாசமான அருமையான பாடல்கள்
1.நான் பாடிகொண்டே இருப்பேன் ----சிறை
2.மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே----நூல்வேலி.
3.மானஸ ஸஞ்சரரே-----சங்கராபரணம்.
மூன்று பாடல்களிலும் உள்ள அழகை இனிமையை உணர்ந்து ரசிக்கலாம் வாங்க!

Tuesday, March 11, 2008

அன்புக்கும் அளவு!!

உன் மீது நான் கொண்ட
அன்பின் ஆழம் கூற
கடலும் ஆகுமோ ஓர் அளவு
இலலை
வானமும் வணங்குமோ பெரிதளவு!!
உழைக்கும் மனிதனின்..
வேர்வையின் மதிப்பு...
தன்னம்பிக்கை கொண்டவனின்
மனதின் செழிப்பு...
தன்மானம் காத்திடும்
ஒருவனின் செருக்கு.....
உண்மையே உயிரெனக்
கொள்பவனின் மிடுக்கு...
இவை யாதிலும்
பெரிதெனக் கூறுவேன் யான்......
இதனினும் மேலாய்
அறியவும் வேண்டினால்
கூற்றுவன் வந்தெனைக்
கவரும் காலை.....
உன் மீது நான் கொண்ட
என் அன்பு மட்டும்
விட்டு விலகா நாய்குட்டியாய்
சுற்றிடும் உன் காலை....
என் அன்பின் ஆழம்
உணர்வாய் அவ்வேளை!

Monday, March 3, 2008

கிளைக்கும் மனம்

அழிக்க இயலா

எதிர்த்துக் கிளைக்கும்

மண்புழுவாய்

என் மனம்!

யாரேனும் சிதைக்க விரும்பி

பாறையைப் போட்டால்......

கீழே மண் பறித்து

சந்ததி வளர்க்கும்!

வெட்டு ஒன்று துண்டு இரண்டென

வெட்டியும் போட்டால்......

வாலுக்குத் தலையும்,

தலைக்கு வாலும்,

தழைத்து வளரும்!!!!

தன்னுள்ளே

ஒரு கணம் ஆணாய்.....

மறுகணம் பெண்ணாய்.....

ஆதிக்கம் நடத்தும்!

ஒழிந்தது சனியென

மறந்திடும் வேளை,

சிறு துளி மழை வி

சிலிர்த்துச் சீறும்!

ஆக

அழிக்க இயலா.....

நிலைத்து வாழும்

மண்புழுவாய்

என் மனம்

பிழைத்து நிற்கும்!